Wednesday, October 04, 2006

மாறுபட்ட பாலீர்ப்பு - பெற்றோர்களுக்கு சில குறிப்புகள்

மாறுபட்ட பாலீர்ப்பு/தற்பால் நாட்டம் உள்ளவர்களின் பெற்றோர்களுக்கு சில குறிப்புகள்

  • எனக்குத் தெரிந்த சாமியார்/மந்திரவாதி /குறிசொல்பவர் /மூலிகை வைத்தியர்/ மருத்துவர் இருக்கிறார்.அவர் இதை எல்லாம் குணப்படுத்தி விடுவார்.

இப்படி எல்லாம் உங்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நலம்விரும்பிகள் சொல்லக்கூடும்.அல்லது நீங்களே இந்த முடிவுக்கு வரலாம்.முதலில் இது ஒரு வியாதி அல்ல ஒரு மாறுபட்ட பாலீர்ப்பு.வல்லுனர்கள் இதன் காரணம் மரபணுக்களா, சூழலா, அல்லது அவரவர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையா என்ற முடிவு கிடைக்கவில்லை.ஆனாலும் உலக உடல்நல நிறுவனம் (World Health Organization), மற்றும் உலக அளவில் பல மனோதத்துவ நிபுணர்களும் மாறுபட்ட பாலீர்ப்பு,மற்றும் தற்பால்/ஓரின நாட்டம் இவை வியாதிகளோ உடற்கோளாறோ அல்ல என்று அறிவித்து விட்டனர்

  • இது நமது கலாச்சாரம் அல்ல.மேற்கத்தியர்களின் கலாச்சாரம்.இதனால் கலாச்சார சீர்கேடு தான் விளையும்.கண்ட புத்தகங்கள்/திரைப்படங்கள்/ நண்பர் சகவாசம் தான் இதற்குக் காரணம்.

நமது இதிகாசங்களில் இருந்த சிகண்டியும், வங்காள க்ரித்திவாச ராமாயணத்தில் இருபெண்களின் சேர்க்கையால் உண்டாகும் பகீரதனின் பிறப்பும், மோகினி வடிவில் இருந்த விஷ்ணுவின் பால் சிவனுக்கு ஏற்பட்ட ஈர்ப்புக்கு என்ன பெயர் கொடுக்கப் போகிறீர்கள்? காஜுராஹோவிலும் இன்னும் இத்தகைய உறவு முறைகளை வெளிப்படுத்தும் பல சிற்பங்கள் இருக்கின்றன.இது பற்றி மேலும் படிக்க விரும்பினால் ருத் வனிதா மற்றும் சலீம் கிட்வாயின் , சேம் செக்ஸ் லவ் இன் ஏன்சியண்ட் இந்தியா என்ற புத்த்கத்தைப் பாருங்கள் (Same Sex Love in Ancient India, Ruth Vanitha and Saleem Kidwai)

  • இதனால் என் மகனுக்கு எய்ட்ஸ் நோய் வந்து விடுமா? ஓரினச்சேர்க்கையால் இந்நோய் பரவும் என்று படித்திருக்கிறேனே?

தற்பாலாக இருந்தாலும் சரி எதிர்பால் உறவாக இருந்தாலும் சரி பாதுகாப்பற்ற் உடலுறவால் பரவுவதே எய்ட்ஸ் மற்றும் HIV..தகவல்களின் படி பார்த்தால் இந்தியாவில் பல தார உறவு/பல பெண்களுடன் பாதுகாப்பற்றா உடலுறவால் எச்.ஐ.வியால் பாதிக்கப்படும்ஆண்கள் எண்ணிக்கை அதிகம்.இது பற்றி உங்களுக்குக் கவலை இருக்குமேயானால் உங்கள் மகன் அல்லது மகளிடம் பாதுகாப்பான உடலுறவைப்பற்றி நிச்சயம் பேசுங்கள்.அவர்களும் நீங்களும் திறந்த மனத்துடன் பேசினால் இருவருமே தெளிவடைவீர்கள்.

  • சரி என் மகன்/மகளின் வாழ்க்கை முறையை நான் ஏற்றுக்கொண்டு விட்டேன்.ஆனால் சமூகம்? ஆர்ட்டிக்கிள் 377 இவர்களை குற்றவாளிகள் ஆக்குகிறதே? என் மகனை காப்பது எப்படி?

பெற்றோரான உங்களுக்கு இது மிகவும் நியாயமான கவலை தான்.இரு நூறு வருடங்களுக்கு முன் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. ஜாதிக்கேற்ப தான் பள்ளிகளில் அனுமதி.அவையெல்லாம் மாறியது போல இதுவும் மாறும். பொருளாதார வல்லுனர் அமார்த்த்யா சென், எழுத்தாளர் அருந்ததி ராய், விக்ரம் சேத் போன்ற பலர் அரசாங்கத்தில் பிரிட்டிஷ் பாரம்பரியமான மனித உரிமை மீறலுக்கு இடம் அளிக்கும் இந்த ச்ட்டத்தை ஒழிக்க மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

  • திருமணம் மற்றும் குழந்தைகள், வம்ச விருத்தி??

அவர்கள் நல்வாழ்விற்கு முதல் படி நீங்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணையையும், வாழ்க்கை முறையையும் மதிக்கவேண்டும். வாழ்க்கைத்துணையை நண்பர் என்று அறிமுகப்படுத்தும் பொய்யான நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தாதீர்கள். தத்தெடுத்து வளர்த்த இந்தியாவில் பல லட்சம் குழந்தைகள் உள்ளனர்.உங்கள் மகன் / மகள் அன்பிற்காக ஏங்கும் அத்தகைய குழந்தைகு நல்ல தாய்/தந்தையாக ஏன் விளங்கக்கூடாது?

No comments: